பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கொலை செய்ய தூண்டும் வகையில் பேசியதாக இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி குறிப்பிட்ட சில அரசியல் கட்சியினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் கடந்த 29-ந் தேதி பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஒருமையில் பேசியதோடு, அவர்கள் இருவரையும் கொலை செய்யத் தூண்டும் வகையிலும் பேசியதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், நெல்லை கண்ணனுக்கு எதிராக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. சென்னையில் ஆளுநர் மாளிகையிலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
நெல்லை கண்ணன் மீது இரண்டு சமூகங்களுக்கிடையே மோதல் உருவாக்கி அதன் மூலம் கலவரத்தை உருவாக்க முயல்வது, இரண்டு மதங்களுக்கிடையே தேவையற்ற , ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி மத மோதலை உருவாக்குவது உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு வந்த குறிப்பிட்ட இரண்டு அரசியல் கட்சியினர், நெல்லை கண்ணனுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி தனியார் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், உடல்நிலை சரியில்லை என்றால் அவரை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி போலீசாரே அரசு மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவினரை சமாதானம் செய்த போலீசார், ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். வண்ணார்பேட்டையிலுள்ள கேலக்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நெல்லை கண்ணனை அங்கு சிகிச்சைக்கு சேர்த்துக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ரோஸ்மேரி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கும், பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment