Wednesday, March 11, 2020

நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமனம்!

நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக பாஜக தலைவராக எல் முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சித் தலைவர் ஜேபி நட்டா உத்தரவை வழங்கினார்.


செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு எல் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல் முருகன், 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்டவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பிஎல் பட்டத்தையும் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எல் படிப்பும் முடித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் மனித உரிமை சட்டம் தொடர்பான பிஎச்டி பட்டம் படித்து வருகிறார். இவர் 1977-ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி பிறந்தார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. எனினும் அவர் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் அப்பதவியிலிருந்து விலகினார்.

இதையடுத்து காலியாக இருந்த அப்பதவிக்கு வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், கேடி ராகவன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் ரேஸில் இருந்தனர். அப்போது ரஜினிகாந்த் கூட அப்பதவிக்கு வரலாம் என சொல்லப்பட்டது. தமிழக பாஜகவின் புதிய தலைவரை‌ தேர்வு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்‌டம் சென்னையில் நடந்தது.

இதையடுத்து தமிழக பாஜக தலைவராக குப்புராமு நியமிக்கப்படுவார் என சொல்லப்பட்டது. இது போன்று பல்வேறு யூகங்களுக்கு மத்தியில் இன்று ஒருவழியாக தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவான தலைவரை நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

No comments:

Post a Comment

Popular Posts