ஆதார் அடையாள அட்டை இல்லை என்பதால், பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண், அடையாள அட்டையைப் பெற்றபோதும் பணி திரும்ப வழங்கப்படவில்லை. இதனால், உடல் நலம் குன்றிப் போன அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆதார் அடையாள அட்டை கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் ஆதார் தொடர்பாக வழங்கி தீர்ப்பில், வங்கிகள் உள்பட எந்தவொரு துறையிலும் கட்டாயமாக ஆதார் அடையாள அட்டையைக் கேட்டு பயனாளிகளைக் கஷ்டப்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவு வெளியாகி அமலிலிருந்தாலும், வங்கிகள் தொடங்கி எங்கும் இந்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை.
வங்கி அதிகாரிகளிடம் உச்ச நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினால் எங்களுக்கு அந்த உத்தரவின் நகல் வரவில்லை என பதிலளிக்கிறார்கள். இந்த சூழலில் ஆதார் அட்டையால் பெண் ஒருவரின் நிலை தலைகீழாக மாறிப்போன அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரில்தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ந???ல்லூர் அரசு மருத்துவமனையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தவர் மாலதி. இவர் பணியிலிருந்தபோது ஆதார் அடையாள அட்டை இல்லை. இதனால் மாலதியை, கடந்த ஆண்டு மருத்துவமனை நிர்வாகம் பணியிலிருந்து விலக்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாலதி, மருத்துவமனையில் தனக்குப் பணி வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளார். எனினும், மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. இதற்கிடையில் மாலதி ஆதார் அடையாள அட்டையை அரசிடம் விண்ணப்பித்து அதைக் கையிலும் பெற்று விடுகிறார்.
அரசிடமிருந்து பெற்ற ஆதார் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளிடம் சென்று மாலதி முறையிட்டார். எனினும் முறையான பதில் கிடைக்கவில்லை. அதே வேளையில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்த மாலதி, மாத்திரைகளைப் பயன்படுத்தி தற்கொலைக்கு முயன்றார். அவர் வீட்டில் கவலைக்கிடமாகக் கிடப்பதைப் பார்த்த மாலதியின் உறவினர்கள் சிலர், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மாலதி தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
No comments:
Post a Comment