Monday, March 16, 2020

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளமதி நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்கு மூலம்.!

காதலனுடன் வீட்டிலிருந்து வெளியேறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம்பெண், உறவினர்களால் கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால், காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும், ஆஜரான அந்த பெண், பெற்றோருடன் செல்வதாக கூறியுள்ளார்.


ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கவுந்தபாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞரும், குருப்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளமதி என்ற பெண்ணும் காதலித்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் இருவரும் ஒன்றாக வேலை செய்தபோது ஏற்பட்ட நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வழக்கம் போலவே காதலுக்கு பெண்ணின் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

எதிர்ப்புக்களையெல்லாம் பொருட்படுத்தாத அந்த ஜோடி, கடந்த 9-ம் தேதி சேலம் அருகே உள்ள காவலாண்டியூர் பகுதிக்கு சென்று, சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு, செல்வனின் நண்பர் ஈஸ்வரன் என்பவர் உதவி செய்து அடைக்கலம் கொடுத்துள்ளார். இதற்கிடையில், தமது மகள் கடத்தப்பட்டதாக, இளமதியின் பெற்றோர், பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



அன்று இரவு 8 மணியளவில், திடீரென 4 கார்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்த 40-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல், புதுமணத் தம்பதியையும், திருமணத்திற்கு உதவிய ஈஸ்வரனையும் கடத்திச் சென்றது. இதுகுறித்து, ஈஸ்வரன்  தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், இளமதியின் தந்தை ஜெகன்நாதன் உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட செல்வனையும், ஈஸ்வரனையும் மீட்டனர். ஆனால், 5 நாட்களாக இளமதியின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்து வந்தது. பெற்றோரால் கடத்திச் செல்லப்பட்ட இளமதியை போலீசார் மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, இளமதியை போலீசார்  தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், திடீரென மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில், இளமதி, வழக்கறிஞர் சரவணன் மற்றும் தாயுடன் வந்து ஆஜரானார். அப்போது இளமதியிடம் காவல் துணை கண்காணிப்பாளர் சவுந்தரராஜன் விசாரணை செய்தார். அப்போது, இளமதி தாயாருடன் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து, இளமதியிடம் காவல்துறை உயரதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டு அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.



இதற்கிடையே, தமது மனைவி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக செல்வன் மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், வழக்கறிஞர்கள், சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இளமதியை அழைத்து வந்தனர். அப்போது,  மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்னிலையில் இளமதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட விசாரணையின்போது, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் சொந்த விருப்பத்தின் பேரில் தாயுடன் செல்வதாகவும் இளமதி நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து இளமதியின் விருப்பப்படி நீதிபதி குமரகுரு பெற்றோருடன் செல்ல அனுமதித்தை தொடர்ந்து அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இளமதி வழக்கறிஞர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட உறவினர்களுடன் வந்ததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. காதலரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம்பெண், பெற்றோருடன் போவதாக கூறியது, காதலன் செல்வன் தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

Popular Posts