Tuesday, March 24, 2020

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தனியார் நிறுவன மேலாளர் கைது

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.



இதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள், முதல்வர் வீட்டின் வெளிப் பகுதியில் சோதனையிட உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் முதல்வர் வீட்டின் வெளிப் பகுதியிலும், உள்ளேயும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால் அங்கிருந்து எந்த வெடிப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா (41) என்பது தெரிந்தது. அவரை மடிப்பாக்கம் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர் எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி செய்து வருவதும், மதுபோதையில் மிரட்டல் விடுத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இவர் கடந்த ஜனவரி மாதமும் இதேபோல் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Posts