Friday, March 13, 2020

16 வயது சிறுமிக்கு 4 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை...

திருத்துறைப்பூண்டி அருகே 16 வயது சிறுமியை 4 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய மூன்று இளைஞர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சிறுமியின் தாய் - தந்தை இருவருமே விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இதனால் இருவருமே அதிகாலையிலேயே வேலைக்கு சென்று விடுவார்கள்.

இந்நிலையில் சிறுமியின் வீட்டருகே முப்பது வயது மதிக்கத்தக்க ஜான்சன் என்ற இளைஞர் வசித்து வருகிறார். அவர் வீட்டிற்கு மருதவனம் பகுதியைச் சேர்ந்த ஜான்சனின் நண்பர் கார்த்திக் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது சிறுமி உடன் கார்த்திக்கிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமி பகலில் தனியாக வீட்டில் இருப்பதை பயன்படுத்திக்கொண்ட கார்த்திக், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அடிக்கடி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்

இந்நிலையில், சிறுமியை தனது பாலியல் வலையில் வீழ்த்தியதை பெருமையாக நண்பர் ஜான்சன் மற்றும் மற்றொரு நண்பர் விஸ்வராஜ் ஆகியோரிடம் கார்த்திக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை தங்களின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்த நினைத்த ஜான்சன் மற்றும் விஷ்வராஜ், கார்த்தி உடனான பழக்கத்தை பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என சிறுமியிடம் மிரட்டியுள்ளனர்.

பெற்றோரிடம் சொல்லாமல் இருக்க தங்களின் பாலியல் இச்சைக்கு அடிபணிய வேண்டும் என மிரட்டி இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை கார்த்தியிடம் தெரிவித்து, பின்னர் மூவரும் சேர்ந்து அந்த சிறுமியை 4 மாத காலமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளனர்.

இதனால் சிறுமி உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதைக்கண்ட சிறுமியின் பெற்றோர் சிகிச்சைக்காக அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை சோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது 3 இளைஞர்களும் 4 மாதமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் மூன்று பேர் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தல், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கார்த்தியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் ஜான்சன் மற்றும் விஸ்வராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Popular Posts