Wednesday, March 11, 2020

மாஸ்டர் பட இணை தயாரிப்பாளரிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை

'பிகில்' படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் நடிகர் விஜய் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரி அதிகாரிகள் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் விஜய் தற்போது நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள லலித்குமாரின் இல்லத்தில் இந்த விசாரணை நடந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த மாதம் நடிகர் விஜய் வீட்டில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தோம்.


அதில் நடிகர் விஜய் வங்கிக்கணக்கில் லலித்குமார் என்பவரிடம் இருந்து குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகை 'மாஸ்டர்' படத்துக்காக பெறப்பட்ட முன்பணம் என விஜய் தரப்பில் கூறப்பட்டு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனவே அதுகுறித்து லலித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது', என்றனர்.

நாளை ரஜினி கட்சி பெயர் அறிவிப்பு!

2021-ம் ஆண்டு தேர்தலுக்கு தமிழக அரசியல் தயாராகி வருகிறது. திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் ஏற்கெனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன. குறிப்பாக 2021-ம் ஆண்டு தேர்தலில் எதிர்பார்க்கப்படும் அரசியல் வருகையாக இருக்கிறார் ரஜினி. இன்னும் கட்சி தொடங்கப்படவில்லை என்றாலும் சமீபத்திய அரசியல் செய்திகளில் ரஜினியின் பெயர் அடிக்கடி வந்து போகிறது. அவ்வப்போது மக்கள் மன்றத்தினரையும் ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.



கடந்த வாரம் சென்னையில், ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர் கூட்டத்தில் 36 மாவட்டங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், ரஜினியின் அரசியல் வருகை, மாவட்ட செயலாளர்களின் பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக சொல்லப்பட்டது.
அப்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்பது உண்மையல்ல என நிர்வாகிகளிடையே அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகின. அக்கூட்டத்தின் முடிவில், ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றமென ரஜினி கருத்து கூறியிருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், கட்சி தொடங்கி எதிர்காலத்தில் ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டால், தான் முதலமைச்சராக பதவி ஏற்கப்போவதில்லை என்றும், கட்சியின் தலைமைப் பொறுப்பை மட்டுமே வகிக்கப்போவதாகவும் ரஜினி கூறியதாக தகவல் வெளியானது. ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்கப்போகிறார்? கமல், பாஜக என பல திசைகள் இருக்கும் பட்சத்தில் ரஜினிகாந்த் தேர்ந்தெடுக்கப்போகும் திசை எது? அல்லது தனித்திசையில் பயணிக்கப்போகிறாரா என பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் நாளை மீண்டும் சந்திக்க உள்ளார். சென்னையில் உள்ள ராகவேந்திர மண்டபத்தில் நாளை காலை எட்டு மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைவதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் அவர் விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியில், மக்கள் மன்ற நிர்வாகிகளை நாளை சந்திக்கும் ரஜினி கட்சியின் பெயரை அறிவிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கட்சித் தொடங்கப்போகும் நாள், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tuesday, March 10, 2020

கொரோனா வைரஸை விரட்டி அடித்த அமைச்சர் விஜயபாஸ்கர் !

சென்னையில் கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று இரவு மொத்தமாக குணப்படுத்தப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியது.


இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட இந்த நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். அங்கு இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார்.


12 வருடமாக அங்கு பணியாற்றும் இவர், அவ்வப்போது தமிழகம் வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு வந்ததை அடுத்து சரியாக 10 நாட்களுக்கு முன் இந்தியா வந்துள்ளார். காஞ்சிபுரம் வந்த இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வறட்டு இருமல், சளி தொல்லை இருந்துள்ளது இதையடுத்து இவர் சிகிச்சைக்காகக் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில் கொரோனா இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.


அவரின் ரத்த மாதிரி புனே அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்பின்தான் தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட தொடங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான குழு தீவிரமாக களமிறங்கி தனது பணிகளை கவனிக்க தொடங்கியது. இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

கொரோனா வைரஸ் தொடுதல் மூலம் பரவ கூடிய வைரஸ் ஆகும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது எளிதாக பரவும். இதனால் காஞ்சிபுரம் இளைஞர் தொடர்பு கொண்ட நபர்களுக்கும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும். இதை காண்டாக்ட் டிரேஸ் முறை என்பார்கள். இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக இதே முறையை தமிழக அரசு பயன்படுத்தியது. அந்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது.

இதன் மூலம் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பரவவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. இன்னொரு பக்கம் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பது அடிப்படை விஷயங்கள் ஆகும். காய்ச்சல் மருந்து, ஜலதோஷம் மருந்து மற்றும் வயிற்றுப்போக்கு மருந்துகளை மட்டும் தொடர்ந்து கொடுத்து வந்தால் போதும். வைரஸ் தானாக குணமாகும் வரை இதை செய்ய வேண்டும்.

அதே சமயம் இந்த வைரஸ் பிறருக்கும் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக பார்த்துக் கொண்டது. அதே போல் விஜயபாஸ்கர் இதற்காக கூடுதல் பணியாளர்களையே நியமித்து இருந்தார். அவர்களுக்கு முழு உரிமையும், முடிவு எடுக்கும் அதிகாரங்களும் கொடுத்து இருந்தார். சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் மூலம் தமிழகத்தில் இருந்து வெறும் 3 நாட்களில் கொரோனா வைரஸ் துரத்தப்பட்டு இருக்கிறது.

ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் - எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.

நடிகர் ரஜினிகாந்த் இப்போது அரசியலுக்கு வர நினைப்பது காலம் கடந்த செயல் என்று சொல்கிறார் பிரபல எண் கணித நிபுணர் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன். ரஜினிகாந்த் 30 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் இறங்கியிருக்க வேணடும்.


சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தற்போது காலம் கடந்து விட்டது 69வது வயதில் அரசியலுக்கு வர நினைப்பது சரியில்லை. இன்னும் 3 ஆண்டுகளுக்கு அவர் அரசியலுக்கு வருவதைப் பற்றி நினைக்கவே வேண்டாம் என்று கூறியுள்ளார் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன்.

ரஜினி காந்த் பிறந்த தேதி 12- 12-1950 கூட்டுத்தொகை 3. இது குருவின் எண். தெய்வபக்தி, தேச பக்தி, உழைப்பாளி. பிறரின் கஷ்டங்களை வாங்கிக்கொள்வார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 வருகிறது. உடல் ரீதியாக மனரீதியாக பல போராட்டங்களை பெற்றிருக்கிறார்.

ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த பலரும் 3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள்தான் அதனால்தான் அவர் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் அவரது மனம் ஆன்மீகத்தை நாடியது.

ரஜினிகாந்துக்கு தற்போது 69 வயதாகிறது. கூட்டுத்தொகை ஆறு. பிறந்த தேதி கூட்டுத்தொகை 3 ஆம் எண் இது குரு ஆதிக்கம் கொண்ட எண். 69 கூட்டுத்தொகை 6 அது சுக்கிரனின் எண். ரஜினிகாந்த் இந்த வயதில் அரசியலுக்கு வரமாட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கியிருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் கூறியுள்ளார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.

காஞ்சிபுரம் நபர் முழுமையாக குணமடைந்தார்; கரோனா இல்லா தமிழகம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

கரோனா வைரஸ் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட காஞ்சிபுரம் நபர் பூரண குணம் அடைந்துவிட்டதாகவும், தமிழ்நாட்டில் ஒருவர்கூட கரோனா பாதிப்பில் இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.



சீனா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா, தென் கொரியா, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் விசா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்தியா முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு விமானத்தில் வரும் பயணிகளைக் கண்காணிக்கவும் பரிசோதனை செய்யவும் பன்னாட்டு விமான நிலைய வருகை முனையத்தில் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து சென்னை விமான நிலையம் உள்பட தமிழகத்தில் உள்ள 4 முக்கிய விமான நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்கு தினமும் 52 விமானங்களில் 8500 பயணிகள் வருகின்றனர். தற்போது சீனா, ஜப்பான், இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் அனைத்து விமானங்களிலும் பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர்.

இதுவரை விமான நிலையங்களில் 1 லட்சத்து 111 பேரை பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 1,243 பேரை தொடர்ந்து 28 நாட்களாக கண்காணித்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது.

ஆனால், சோதனையில் அது கண்டறியப்படாமல் நான்கைந்து நாட்கள் கழித்து அவர் கரோனா பாதிப்புடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர தகவலறிந்து உடனடியாக அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தமிழகத்தில் ஒரே ஒரு நபருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது. தொடர் சிகிச்சையின் விளைவாக அவர் முழுமையாக குணமடைந்தார். இந்தத் தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் இன்று பகிர்ந்துள்ளார். அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயதுச் சிறுவனும் குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டர் பதிவு:

''நமது மாநிலத்துக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நபர் முழுமையாக குணமடைந்துவிட்டார். அவரது சோதனை மாதிரிகள் கரோனா இல்லை என்பதைத் தெரிவித்துள்ளது. இந்த வேகமான மீட்புக்குக் காரணம் மிகச்சிறந்த சிகிச்சையும், தேவைகளைக் கையாண்ட நிபுணர்களின் நிபுணத்துவமும்தான். தற்போது நம் மாநிலம் கரோனா இல்லா தமிழகமாக உள்ளது''.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்திலிருந்து வாத்தி கமிங் பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் 130 நாட்களுக்கு மேலாக நடைபெற்றது. தற்போது முழு ஷூட்டிங்கும் முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட பணிகளும், விளம்பரமும் ஒருசேர ஏப்ரல் மாத ரிலீஸுக்காக நடைபெற்று வருகிறது.



இப்படத்தில் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. விஜய்யுடன் முதன் முறையாக விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, ரம்யா, ஆர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

கத்தி படத்தை தொடர்ந்து மீண்டும் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்திலிருந்து குட்டி ஸ்டோரி என்னும் விஜய் பாடிய பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 15ஆம் தேதி நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலை ஐந்து மணிக்கு இப்படத்திலிருந்து வாத்தி கமிங் எனும் இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளது.

Monday, March 9, 2020

அடுத்த படத்தின் தலைப்பு .... திரெளபதி இயக்குனர் அதிரடி!

திரெளபதி படத்தை போலவே தான் இயக்கும் அடுத்த படத்துக்கும் கடவுள் பெயரில் தலைப்பு வைக்கப்போவதாக இயக்குநர் மோகன் ஜி அறிவித்துள்ளார்.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்டு கதாநாயகனாக நடித்து திரெளபதி என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோகன் ஜி, திரெளபதி என கடவுளின் பெயரை வைத்ததால்தான் இப்படத்தின் மீது வன்மம் காட்டப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தான் இயக்கும் அடுத்த படத்துக்கும் கடவுள் பெயரிலேயே தலைப்பு வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ள அவர்,   விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்

Popular Posts