Saturday, March 28, 2020

பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்...!

நாட்டுப்புற பாடலில் புகழ் பெற்றவரும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா சில மாதங்களாக உடல்நலக்குறைவால் இருந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார்.

மதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் பிரபலமான இவர், தூள் என்ற படத்தின் மூலம் நடிகை மற்றும் பாடகியாக திரைத்துறையில் அறிமுகமானார். 25 படங்கள் வரை நடித்த அவர், 83 வயதான நிலையில், சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.


அவர் கடும் வறுமையிலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து, திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Friday, March 27, 2020

கொரோனாவுக்கு மருந்து... விரைவில் டெஸ்டிங்.. பெங்களூர் டாக்டர் அதிரடி!

கொரோனவை குணப்படுத்துவதற்காக பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது. பெங்களூர் எச்சிஜி மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க அல்லது கொரோனாவை குணமாக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது.



கொரோனா வைரஸ் நமது உடலுக்குள் சென்ற பின் நோய் எதிர்ப்பு சக்தி செல்களால் கண்டுபிடிக்க முடியாது. காரணம் கொரோனா வைரஸ், உடலில் இருக்கும் சாதாரண செல் போல வேடமிட்டு, அதற்கு உரிய சிக்னல்களை அனுப்புவதால், நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் குழம்பி போய், கொரோனாவை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. இதனால் உடலை தாக்கும் கொரோனா, நோய் எதிர்ப்பு சக்தி செல்களை மொத்தமாக செயலிழக்க செய்கிறது.

இந்த நிலையில்தான் கொரோனாவை குணப்படுத்துவதற்காக பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது. பெங்களூர் எச்சிஜி மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தொடார்பாக விஷால் ராவ் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்து மனித உடலில் கொரோனா காரணமாக செயலிழந்த நோய் எதிர்ப்பு திறனை மீட்டு கொண்டு வருவது ஆகும்.

இது மருந்துதான். ஆனால் தடுப்பூசி கிடையாது. மனித உடலில் உள்ள சைட்டோகைனஸ் (cytokines) எனப்படும் எதிர்ப்பு சக்தி புரதம், நோய் செல்களை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சைட்டோகைனஸ்தான் பல்வேறு மருந்துகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு புரதங்களிலும், வைரஸ்களை கண்டுபிடிப்பதிலும் இந்த சைட்டோகைனஸ் முக்கிய இடம் பிடித்துள்ளது.

பல்வேறு சைட்டோகைனஸ் கலவையை உருவாக்கி, மனித உடலில் மீண்டும் செலுத்துவதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனா செல்களை கண்டுபிடிப்பதில், நோய் எதிர்ப்பு செல்களை மீண்டும் தூண்டுவதில் இந்த சைட்டோகைனஸ் உதவும், என்று அவர் கூறியுள்ளார். இந்த வார இறுதியில் இது சோதனைக்கு தயார் ஆகும். இதற்காக மத்திய அரசிடம் சோதனை அனுமதி கேட்டு இருக்கிறோம். அதேபோல் உடலில் இருக்கும் இன்டர்பெரான் (interferon) எனப்படும் செல்கள் நோய் எதிர்ப்பு திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்டர்பெரான் செல்கள் கொரோனா காரணமாக வெளியே சுரப்பது தடுக்கப்படுகிறது. இதுதான் நோய் எதிர்ப்பை குறைக்கிறது. இதனால் இதை செயற்கையாக நாம் உடலின் உள்ளே செலுத்த வேண்டும். இந்த இன்டர்பெரான் (interferon) மற்றும் சைட்டோகைனஸ் (cytokines) கலவை மற்றும் வேறு சில எதிர்ப்பு செல்கள் கலவை மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை கட்டுப்படுத்த இன்டர்பெரான் உதவும் என்பதற்கு எங்களிடம் சில சோதனை முடிவுகள் உள்ளது .

இதை ஒன்றாக சேர்த்து சோதனை செய்ய போகிறோம். விரைவில் இதன் முடிவுகளை அறிவிப்போம் என்று, புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார். உலகமே இந்த கொரோனாவிற்கு சிகிச்சை என்ன? மருந்து என்ன? என்று குழம்பிக் கொண்டு இருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து அதற்கான சிறிய வெளிச்சம் தோன்றி உள்ளது. பெரியம்மை, போலியோ ஆகிய நோய்களை இந்தியா விரட்டியது போல கொரோனாவையும் விரட்டும் என்று உலக சுகாதார மையம் நம்பிக்கை தெரிவித்தது.. அதற்கான அறிகுறிகள் தெரிய துவங்கி உள்ளது.

Thursday, March 26, 2020

காதல் நெருக்கத்தை அதிகரித்த கொரோனா - ஆணுறை விற்பனை அதிகரிப்பு


இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. அதனையடுத்து, எடுக்கப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒருபகுதியாக ஐ.டி துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதித்துள்ளனர். இந்த கொரோனா பாதித்த காலத்தில் உணவு விற்பனை, மாஸ்க், மருந்துகளின் விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல, ஆணுறையின் விற்பனையும் அதிகரித்துள்ளது என்று தெரிகிறது.




இந்தக் காலத்தில் வீட்டிலிருக்கும் காதல் தம்பதிகளுக்கு இடையில் தாம்பத்திய உறவும் அதிகரித்துள்ளது என்பது ஆணுறையின் விற்பனை அதிகரித்துள்ளதன் மூலம் தெரியவந்துள்ளது.

ஆன்லைன் விற்பனை இணையதளத்திலும், ‘ஆணுறையின் விற்பனையும் கருத்தடை மாத்திரையின் விற்பனையும் அதிகரித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஆணுறை விற்பனை திடீரென தாருமாறாக அதிகரிப்பு

மக்கள் வீடுகளிலேயே அதிக நேரம் இருப்பதால் ஆணுறை விற்பனை இந்தியா முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை போல் ஆணுறை விற்பனையும் மிக மிக அதிக அளவு அதிகரித்துள்ளது.



கொரோனா வைரஸ் பரவும் வேகம் மக்களிடையே வேண்டிய அனைத்தையும் வாங்கி தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற அச்சம் உணர்வு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் பரவுவதால் மக்கள் தங்களால் முடிநத் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைக்கின்றனர். இந்த மாத இறுதி வரை ஜிம், பார்க் மற்றும் தியேட்டர்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.

அத்துடன் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதால், மக்கள் உணவு மற்றும் சுகாதார பொருட்களை வாங்கி சேமிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் ஆணுறை விற்பனை பிய்த்துக்கொண்டு செல்கிறது. பல சில்லறை விற்பனை கடைகளில் கடந்த ஒரு வாரத்தில் விற்பனை கிட்டத்தட்ட 25% முதல் 50% வரை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தென் மும்பையில் உள்ள ஒரு மருத்துவ கடை உரிமையாளர் ஹர்ஷல் ஷா கூறுகையில், 'மக்களுக்கு இப்போது நிறைய நேரம் இருக்கிறது, அவர்கள் வீட்டில் இருப்பதால் சலிப்படைகிறார்கள். பொதுவாக, மக்கள் சிறிய அளவிலான ஆணுறை பேக்குகளையே விரும்பி வாங்குவார்கள். ஆனால் இப்போது பெரிய பெரிய ஆணுறை பேக்குககளை வாங்குகிறார்கள். இதனால் ஆணுறை விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 'மக்கள் பொதுவாக மூன்று பேக் ஆணுறை தான் வாங்க விரும்புவார்கள். ஆனால் கடந்த வாரத்தில் அவர்களில் பெரும்பாலானோர் 10 மற்றும் 20 பேக்குகளை வாங்கி உள்ளார்கள்" என்றார்.

Wednesday, March 25, 2020

கொரோனா வைரஸுக்கு காரணம் சீனா இல்லையாம்!

சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன் முதலில் கொரோனா வைரஸின் தொற்று கண்டறியப்பட்டது. முதலில் சீனாவில் ஆயிரகணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக அளவில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


உலக அளவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று கூறி வருகிறார். மேலும் பல நாடுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு சீனா தான் காரணம் என குறை கூறி வருகிறது.


இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் மருத்துவ வல்லுநர்களின் ஆராய்ச்சியின் படி கொரோனா வைரஸ் எங்கு, எப்படி  தோன்றியது என்பது இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றும், சீனாவின் வுகான் மாகாணத்திலேயே முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும் சீனா தான் கொரோனா வைரஸ்க்கு காரணம் என்று அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகவில்லை என்றும், கொரோனா வைரஸால் சீன மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Tuesday, March 24, 2020

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தனியார் நிறுவன மேலாளர் கைது

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.



இதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள், முதல்வர் வீட்டின் வெளிப் பகுதியில் சோதனையிட உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் முதல்வர் வீட்டின் வெளிப் பகுதியிலும், உள்ளேயும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால் அங்கிருந்து எந்த வெடிப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா (41) என்பது தெரிந்தது. அவரை மடிப்பாக்கம் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர் எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி செய்து வருவதும், மதுபோதையில் மிரட்டல் விடுத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இவர் கடந்த ஜனவரி மாதமும் இதேபோல் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன் - மோடி உரையின் சாராம்சம்

மார்ச் 24ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.


  • யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்
  • 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்
  • இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை அறிந்துள்ளேன்
  • பொருளாதாரம் பாதித்தாலும், நாட்டு மக்களின் உயிர்தான் எனக்கு முக்கியம்
  • இந்த 21 நாட்கள் நாம் சுய ஒழுங்கைக் கடைபிடிக்காவிட்டால் 20 ஆண்டுகளுக்கு நாம் பின்னோக்கி சென்று விடுவோம்
  • தனித்து இருப்பதை தவிர தப்பிப்பதற்கு வேறு வழி கிடையாது
  • சீனா, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகள் சமூக விலகலை, சரிவர பின்பற்றாததா தான் சிரமப்படுகின்றன. அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம் நாம் கொரோனாவைத் தடுக்கலாம்
  • கொரோனா பரவத் தொடங்கினால் அதை தடுத்து நிறுத்துவது மிகப்பெரிய சவால் ஆகிவிடும்
  • நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், உங்கள் விருந்தினர் உள்ளிட்ட யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கவும் வேண்டாம்
  • இப்போது கடைபிடிக்கப்போகும் ஊரடங்கு என்பது, மக்கள் ஊரடங்கு (ஜனதா ஊரடங்கு) விடவும் கடுமையானதாக இருக்கும்.
  • மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கிராமங்கள் உள்ளிட்ட அனைத்தும் லாக்டவுன் செய்யப்படும். இவ்வாறு, நரேந்திர மோடி தெரிவித்தார்.

Popular Posts